web log free
December 22, 2024

ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் முக்கிய சந்தேகநபர் விடுதலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல்களை மறைத்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல வர்த்தகர் மொஹமட் இப்ராஹிமிற்கும் மற்றுமொருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கி இன்று உத்தரவிட்டார்.

சந்தேகநபர்கள் இருவரும் தலா 2 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளிலும் செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி வௌிநாட்டு பயணத்தடையும் விதித்துள்ளார்.

அத்துடன், மாதாந்தம் முதலாவது ஞாயிறுக்கிழமை சந்தேகநபர்கள் இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் சுமார் 3 வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், அவர்களின் உடல்நிலை உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு அவர்களுக்கு நீதிபதி பிணை வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பங்கரவாத தாக்குதலின் தற்கொலை குண்டுதாரிகளான மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்ஷாப் ஆகியோரின் தந்தையே பிரபல வர்த்தகரான மொஹமட் இப்ராஹிம் என்பவர்.

பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல் அறிந்தும், அதனை பொலிஸாருக்கு தெரிவிக்காது மறைத்த குற்றச்சாட்டில் பிரபல வர்த்தகரான மொஹமட் இப்ராஹிம் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd