உலக சந்தையின் சாதாரண விலையை விட 35% குறைவாக ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை இறக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகள் எரிபொருளை வாங்குகின்றன என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எரிபொருளை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தயார் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் எரிசக்தி அமைச்சிடம் பேசியுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாணயக்கார, அந்த கோரிக்கைக்கு அமைச்சு இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
அமெரிக்காவை மையமாகக் கொண்ட சித்தாந்தம் காரணமாக ரஷ்யாவின் கோரிக்கையை இலங்கை புறக்கணித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
"டாலர் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் இருந்து எரிபொருளை வாங்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது, அதேசமயம் நாங்கள் ரஷ்யாவிலிருந்து குறைந்த விலையில் வாங்கலாம். அமெரிக்காவுடன் நட்புறவைப் பேணுவதற்காக ரஷ்யா வழங்கிய நீண்ட கால கடன் வசதியை நாங்கள் புறக்கணித்துவிட்டோம்,” என்று அவர் வருத்தம் தெரிவித்தார்