களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை ஊழல் மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்ததையடுத்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தனி நபரை போக்குவரத்து சட்டத்திற்கு முரணாக பிரதித் தலைவராக நியமித்து அரசாங்கத்திற்கு சட்டவிரோதமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் ஊழல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் எழுத்துமூல அனுமதியுடன் புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கான உரிமையை தமக்கென ஒதுக்கி இந்த வழக்கை வாபஸ் பெற தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்துள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் முன்னாள் அமைச்சர் வெல்கமவுக்கு எதிராக இலஞ்ச சட்டத்தின் 70ஆவது பிரிவின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
வெல்கம 2010 ஜூன் 23 ஆம் திகதி போக்குவரத்து அமைச்சராக கடமையாற்றிய போது, எல்.ஏ.விமலரத்னவை இலங்கை போக்குவரத்து சபையின் பிரதித் தலைவராக நியமித்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.