அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து பதவிகளிலும் இருந்து நீக்குவது என எடுக்கப்பட்ட தீர்மானத்தை இடைநிறுத்தி நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு பின்னர், கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இடையில் தனிப்பட்ட ரீதியிலான ரகசிய சந்திப்பு நடந்துள்ளது.
இந்த சந்திப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளதுடன் கட்சியின் அதிகாரிகள் எவரும் அதில் கலந்துக்கொள்ளவில்லை.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மகிந்த அமரவீர ஆகியோர் கட்சியில் வகித்து வரும் பதவிகளில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என இந்த சந்திப்பில் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிப்பதற்காக கட்சியின் மத்திய செயற்குழுவை சேர்ந்த சில உறுப்பினர்கள் அமைச்சர்களை கட்சியில் வகித்து வரும் பதவிகளில் இருந்தும் நீக்குமாறு கடுமையான அழுத்தங்களை கொடுத்ததால், அவர்களை நீக்கிய போதிலும் பிளவுப்படவுள்ள கட்சியை மீண்டும் ஒன்றிணைப்பதற்காக அவர்கள் வகித்து வந்த பதவிகளை மீண்டும் வழங்கி, கட்சியில் இணைத்துக்கொள்ள உள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மகிந்த அமரவீர ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அந்த கட்சி அறிவித்திருந்தது
இதற்கு எதிராக அமைச்சர்கள் வழக்கு தாக்கல் செய்திருந்ததுடன் நீதிமன்றம் கட்சியின் தீர்மானத்தை இடைநிறுத்தி உத்தரவிட்டது.