web log free
November 29, 2024

இலங்கை கடற்படையின் மனிதநேயம், குவியும் பாராட்டு

நடுக்கடலில் விசைப்படகு பழுதானதால் தவித்த தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் உதவிய சம்பவம் பாராட்டை பெற்று வருகிறது. 

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

இதில் ராமேசுவரத்தைச் சேர்ந்த சேகர் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப் படகில் சரவணன், அலெக்சாண்டர், அந்தோணி, முருகன், சுப்பையா, சசி என 6 பேர் சென்ற விசைப்படகு இன்ஜின் பழுது ஏற்பட்டு தலைமன்னார் அருகே தத்தளித்துக் கொண்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை தலைமன்னார் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படைக்கு சொந்தமான எஸ்.எல்.என்.எஸ் ரணஜெயா என்ற ரோந்து படகு, இன்ஜின் பழுது காரணமாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த விசைப்படகினை மீட்டனர்.

முதற்கட்டமாக 6 மீனவர்களுக்கும் உணவளித்த இலங்கை கடற்படையினர் பழுதான விசைப்படகின் இன்ஜினையும் பழுதுபார்க்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் இயந்திரக் கோளாறை சரி செய்ய முடியாததால் சர்வதேச கடல் எல்லைக் கோடு வரையிலும் ராமேசுவரம் மீனவர்களின் விசைப்படகை கடற்படையின் ரோந்து படகு மூலம் இழுத்து வந்து ராமேசுவரத்தைச் சேர்ந்த மற்றொரு விசைப் படகிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''இலங்கை கடற்படை எல்லைகளை பாதுகாப்பதுடன் மனிதநேய உதவிகளை செய்வதிலும் முன் நிற்கும்'' என தெரிவித்துள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd