web log free
November 29, 2024

"தலைமை பதவியும் நானும்" - மனம் திறந்து பேசுகிறார் மனோ

தலைமை பதவியும், நானும்! என்ற தலைப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு, 

ஆயுட்கால தலைவராக விடாப்பிடியாக நிற்காமல், வழிவிட்டு, தகுதிகொண்ட பிறருக்கும், பொறுப்பை வழங்க சுயமாகவே முன்வருவது ஒரு முற்போக்கு காரியம் என நான் நினைக்கிறேன். 

இதில், என்னை புரிந்துக்கொண்டு நேரடியாகவும், தொலை தொடர்பு மற்றும் இணைய வழிமுறைகள் மூலமும் என்னுடன் கலந்துரையாடிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. 

2015ம் வருடம் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஆரம்பிக்கப்பட்டு ஏழு வருடங்களாக நான் தலைமை பதவியில் இருக்கிறேன். 

கடைசி வரை அதில் நானே இருக்க வேண்டும் என்ற “பாரம்பரிய அரசியல்” வழமையில் இருந்து விடுபட்டு, தகுதி வாய்ந்த இன்னொருவருக்கு, இப்பதவியை பொறுப்பேற்க இடம் விட விரும்புகிறேன். 

அதற்காக, நாம் உருவாக்கிய கூட்டணியிலிருந்தோ, அரசியலை விட்டோ போகவில்லை. எனக்குள் எக்கச்சக்கமாக நெருப்பும், இரும்பும் கொட்டிக்கிடக்கின்றன. கடமைகளும் காத்திருக்கின்றன.

ஆகவேதான் கூட்டணியில் அரசியல் துறை சார்ந்த பிறிதொரு பொறுப்பை ஏற்றுக்கொண்டு, மலையக தமிழ் இலங்கையர் தொடர்பில், நாம் உருவாக்கி, இப்போது நாட்டின் நெருக்கடி நிலைமை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள, அரசியல் அபிலாஷை கோரிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் முனைப்பாக செயற்பட விரும்புகிறேன்.

எனது இந்த மனக்கிடக்கையை, சமீபத்தில் நான் கலந்துக்கொண்ட ஒரு ஊடக நிகழ்வில் மனந்திறந்து மிகவும் இயல்பாக சொன்னேன். உண்மையில் செவ்வி கண்ட ஊடகரின் கேள்விக்கு பதிலாகவே என் பாணியில் இதை சொன்னேன். 

எமது கூட்டணி என்பது இரகசிய திட்டங்கள் தீட்டும், ஒரு பாதாள குழுவல்ல. ஆயுத போராட்ட இயக்கமும் அல்ல. இராணுவ இரகசியங்கள் என்று எதுவும் இங்கே கிடையாது. 

ஆகவே பொது நிகழ்வில் மக்களுடன், எனது எண்ணத்தை பகிந்து கொள்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. 

இதுதான் ஜனநாயக பரிமாணம். இனிமேலும் அப்படியே ஆகும். இதுவே கலந்துரையாடல்களை மேம்படுத்தும். 

எனினும் இதுபற்றிய முடிவை, வேறு அனைத்து விவகாரங்களையும் போன்று, எமது அரசியல் குழுவே கூடி தீர்மானிக்கும்.  

அதேவேளை ஒருசிலரால், நல்லெண்ணத்துடனும், அரசியல் விழிப்புணர்வுடனும், இதை ஏன், பார்க்க முடியவில்லை என எனக்கு தெரியவில்லை. பார்வை அற்றவர், யானையை பார்த்து கருத்து கூறுவதை போன்று ஒருசிலர் கருத்து கூறுகிறார்கள்.     

சமகாலத்தில், இலங்கையில் தேசிய மட்டத்திலும் சரி, பிராந்திய மட்டத்திலும் சரி, எந்தவொரு அரசியல் கூட்டணியும் எம் அளவில் வெற்றிநடை போடவில்லை. பல கூச்சலும், குழப்பமுமாகவே கிடக்கின்றன. 

இந்த உண்மை சிலர் கண்களுக்கு தெரிவதில்லை. விஷயம் புரியாமல் பேசும், அரசியல் குருடர்கள் தங்களை அரசியல்ரீதியாக இன்னமும் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

2015 ஜூன் மாதம் எமது கூட்டணியை ஆரம்பித்த போது, இது “தேர்தல்கள் முடியும்வரைதான்”, “சில மாதங்கள் வரைதான்”, என பலர் தம் ஆசைகளை ஆரூடமாக கூறினார்கள். 

இன்று இவர்களையெல்லாம் ஏமாற்றிவிட்டு, கடந்த ஏழு வருடங்களாக கூட்டணி செயற்படுகிறது. இன்னமும் தொடர்ந்து வீறு நடை போடும். 

இப்போது, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகவும் தகைமை பெற்றுள்ளது. 

2019 வரையிலான நான்கு வருட, ஆட்சிகாலத்தில் அதற்கு முன் செய்யப்படாத பல காரியங்களை செய்து முடித்தோம். இன்னமும் பல காரியங்களுக்கு அடித்தளம் இட்டுள்ளோம். 

கூட்டணியோடு இணைந்து செயற்படும் சமூக செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் ஆகியோர் அடங்கிய ஆலோசகர் குழுவின் துணையுடன் இலங்கை தேசிய தளத்தில் முழுமையான பிரஜைகளாக விரும்பும் மலையக தமிழ் இலங்கை மக்களது அபிலாஷைகள் என்ற ஆவணத்தை தயாரித்து, அதில் பல அரசியல் கோரிக்கைகளை தொகுத்துள்ளோம். 

இவை நாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களை, அடுத்த வளர்ச்சி கட்டத்துக்கு அழைத்து செல்லும் என எண்ணுகிறோம்.  

கடந்த காலங்களைவிட இன்று, தேசிய அரங்குகளில் மலையக தமிழ் இலங்கையர் என்ற அடையாளம் பெரிதும் புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது. 

அதேபோல், கொழும்பில் இருக்கின்ற வெளிநாட்டு தூதரகங்களில், ராஜதந்திரிகள் மத்தியில், சர்வதேசிய அரங்குகளில், குறிப்பாக இந்திய அரசு, தமிழக அரசு தரப்புகளிலும், நாம் ஒரு வளர்ந்து வரும் தரப்பாக புரிந்துக்கொள்ளப்படுகிறோம். 

மலையகம் என்றால், அது “மலையும் மலை சார்ந்த இடம்” மட்டுமே என்ற தமிழ் இலக்கண வரையறைக்கு அப்பாலான அரசியல் வரலாற்று அடையாளம் புரிந்துக்கொள்ளப்பட்டு வருகிறது. 

மிகவும் பின்தங்கிய தோட்ட தொழிலாளர்களை கைத்தூக்கி விடும் அதேவேளை ஒட்டுமொத்த மலையக தமிழரும் தோட்ட தொழிலாளரல்ல என்ற, நமது பன்முக வளர்ச்சியை உலகம் புரிந்துக்கொண்டு வருகிறது. 

அதேவேளை வடக்கு கிழக்கில் வாழும் ஈழத்தமிழ் உடன்பிறப்புகளுடனும் நல்லுறவை முன்னைவிட அதிகம் பேணுகிறோம். இதை நாம் எமது ஒரு முன்னணி கொள்கையாக கொண்டு நடத்துகிறோம். - என்று மனோ கணேசன் கூறியுள்ளார். 

 

ஈழத்தமிழரும், மலையக தமிழரும் உள்வாங்கப்பட்டே இலங்கை தமிழ் அடையாளம் வரையறுக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். இதுவே எம்மை பலப்படுத்தும்.     

 

இந்த பணிகளில் எல்லாம் எனது பங்களிப்பு என்னவென்று எனக்கு தெரியும். மக்களுக்கு தெரியும். 

 

நாம் செல்ல வேண்டிய பயண தூரம் அதிகம். எனினும் திட்டமிட்டு முன்நகருகின்றோம். இந்த பயணத்தில் இன்னமும் புதியவர்கள் உள்வாங்கப்பட வேண்டும். வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். 

 

இந்த முற்போக்கான பின்னணியில் எனது கருத்து புரிந்துக்கொள்ளப்பட வேண்டும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd