web log free
November 29, 2024

கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தல்

சிங்கப்பூரில் தங்கியிருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைதுசெய்யப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் கனேடிய பழமைவாதக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பியேர் பொய்லியேவ்ர், சமாதானம் நிலவும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இப்போது உலகிலேயே மோதல் இல்லாத - மிகையான இராணுவமயமாக்கலைக்கொண்ட பிராந்தியங்களில் ஒன்றாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்யுமாறு வலியுறுத்தி சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்றவியல் முறைப்பாடொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள பின்னணியில், 'போர்க்குற்றவாளிகள் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும்' என்று வலியுறுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே கனேடிய பழமைவாதக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பியேர் பொய்லியேவ்ர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி தற்போது சிங்கப்பூரில் இருக்கின்ற பின்னணியில் அவரைக் கைதுசெய்யவேண்டுமென வலியுறுத்திவரும் இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களின் கோரிக்கையுடன் நானும் இணைகின்றேன். அதுமாத்திரமன்றி இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச தீர்ப்பாயத்தின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்வதை முன்னிறுத்தி கனேடிய அரசாங்கம் முழுமையான அழுத்தத்தைப் பிரயோகிப்பதை உறுதிசெய்வேன் என்று அவர் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுடன் ஒருமித்துநின்று, போர்க்குற்ற விசாரணை தொடர்பான அவர்களது கோரிக்கைக்கு ஆதரவளித்து, 'மெக்னிற்ஸ்கி' சட்டத்தின் பிரகாரம் குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைகளை விதிப்பதற்கு ஏற்றவாறான கனேடிய தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் வாக்குறுதியளித்துள்ளார்.

'தமிழ்மக்கள் மீதான இனவழிப்பை அடுத்து நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக நாம் நீண்டகாலமாக செயற்பட்டு வந்திருக்கின்றோம்' என்று சுட்டிக்காட்டியுள்ள பியேர் பொய்லியேவ்ர், 'போரினால் கணவனை இழந்த பெண்களுக்கான இழப்பீட்டை வழங்குமாறும், நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கலை இல்லாதொழிக்குமாறும் நாம் ஒரு தசாப்தகாலத்திற்கும் மேலாக வலியுறுத்திவருகின்றோம்' என்றும் தெரிவித்துள்ளார்.

'டொரன்டோ நகரின் வீதிகளில் 5 மீற்றர் இடைவெளியில் இராணுவ வீரர்கள் நிற்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் சமாதானம் நிலவும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இப்போது உலகிலேயே மோதல் இல்லாத - மிகையான இராணுவமயமாக்கலைக்கொண்ட பிராந்தியங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. சிறுபான்மையினத் தமிழ்மக்களை ஒடுக்குவதும் தனியார் சொத்துக்களைக் கையகப்படுத்தி ஆட்சியாளர்களின் அதிகாரத்தை வெளிக்காட்டுவதுமே இதன் பிரதான நோக்கங்களாகும்' என்று கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் பியேர் பொய்லியேவ்ர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Tuesday, 02 August 2022 05:30
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd