அரசியல் குழப்பங்களை அடுத்து இடைநிறுத்தப்பட்ட அமெரிக்காவின் நிதியுதவியை மீளப் பெறுவதற்காக, அரசின் உயர்மட்டக் குழுவொன்று வொசிங்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இலங்கைக்கும் மிலேனியம் சவால் நிதியத்தின் ஊடாக, 480 மில்லியன் டொலர் ( 87 பில்லியன் ரூபாய்) நிதியுதவி வழங்கப்படும் என்று அமெரிக்கா கடந்த செப்ரெம்பர் மாதம், அறிவித்திருந்தது.
இதுதொடர்பான உடன்பாடு டிசெம்பர் மாதம் கொழும்பில் கையெழுத்திடப்படவிருந்தது.
எனினும், ஒக்ரோபர் மாதம் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து, இந்த உதவித் திட்டத்தை அமெரிக்கா இடைநிறுத்தியது.
இந்தநிலையில், மீண்டும் பதவிக்கு வந்துள்ள ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், மிலேனியம் சவால் நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்களை நடத்துவதற்கு உயர்மட்டக் குழுவை அமெரிக்காவுக்கு அனுப்பவுள்ளது.
நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நிதியமைச்சின் செயலர் எச்.எஸ்.சமரதுங்க ஆகியோரைக் கொண்ட குழு, இந்த மாத இறுதியில் வொசிங்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.