web log free
November 29, 2024

வடக்கு கிழக்கு தமிழ் எம்பிக்களுக்கு அமைச்சுப் பதவி

சர்வக்கட்சி அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன், நாமல், பவித்ரா, சந்திரசேன, ரோஹித, லன்சா மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகளை வழங்க பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கவுள்ளது.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான அதாவுல்லா, சிவநேசத்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் சி.வி.விக்கினேஷ்வரன் ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும்,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று இரவு பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து அமைக்கப்படும் சர்வக்கட்சி அரசாங்கத்தின் வியூகம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அரசியல் கட்சிகளுக்குமிடையிலான விசேட சந்திப்பு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி,ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகளுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு கடந்த நாட்களில் இடம்பெற்றன. மக்கள் விடுதலை முன்னணிக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ளது.

சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் பிரதமருக்கும், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இச்சந்திப்பில் சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் விரிவுப்படுத்தப்பட்ட வகையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கபபட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பிரனாந்து, நாமல் ராஜபக்ஷ, எஸ்.எம்.சந்திரசேன, பவித்ரா வன்னியராட்சி, ரோஹித அபேகுணவர்தன, நிமல் லன்ஷா மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகளை வழங்க ஜனாதிபதியிடம் பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான அதாவுல்லா,பிள்ளையான் மற்றும் சி.வி.விக்கினேஷ்வரன் ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சு பதவிகள் வரையறுக்கப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள் குறிப்பிடுகின்றன நிலையில் அக்கட்சியில் சுமார் 08 பேரின் பெயர் அமைச்சரவை அமைச்சுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சிசிர ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.

சர்வக்கட்சி அரசாங்கத்தில் 30 அமைச்சரவை அமைச்சுக்கள், 30 இராஜாங்க அமைச்சுக்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை நிர்வகிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தற்போதைய நிலைவரத்தின் பிரகாரம் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் சாத்தியம் காணப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd