web log free
November 29, 2024

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேச வாக்கெடுப்பு கோரி தமிழ் கட்சிகள் ஐ.நா சபைக்கு கூட்டுக் கடிதம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு, ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கு, சர்வதேச கண்காணிப்புடனான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணையில் உள்ள சரத்துக்களுக்கு மேலதிகமாக சில முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டு இந்த அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் , தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா ஆகியோர் கூட்டாக, இந்த அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு செப்டெம்பரில் நடைபெறவுள்ள நிலையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் ஆறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழர்களின் துன்பத்தைத் தணிக்கவும், தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியக் குற்றங்களுக்கு நீதி வழங்கவும் இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஐநா மனித உரிமைகள் பேரவையை கோரியுள்ளனர். ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 2021 மார்ச் அறிக்கையின் பரிந்துரைக்கு அமைய இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதுடன் வட கொரியாவை போன்று ஐ.நா. பாதுகாப்புப் பேரவை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1983 க்கு முந்தைய காலத்தை போன்று தமிழர் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் பிரசன்னத்தை குறைத்தல் வேண்டும் எனவும், யுத்தம் முடிவடைந்து பதின்மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்னமும் அரசாங்கம் தமிழர் பிரதேசங்களில் அதே இராணுவ மட்டத்தை பேணுவதாகவும் தமிழ் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பிரதேச எல்லைகளை மீள் நிர்ணயம் செய்து அரசாங்கத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்படுகின்ற திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்த வேண்டும் எனவும் அவர்களது அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்காக சர்வதேச கண்காணிப்புடனான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகியுள்ள நிலையில் அவர் அரச தலைவருக்கான பாதுகாப்பை இழந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ் கட்சிகளின் தலைவர்கள், அவரை நீதிக்கான பொறிமுறைக்கு முன் நிறுத்துமாறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை கோரியுள்ளனர். சுயாதீனமாக அரசியல் கருத்துக்களை வெளிப் படுத்துவவதற்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ஐந்து தமிழ் கட்சிகளினதும் தலைவர்கள் கூட்டாக அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd