ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாம் சபையின் பொது விவகாரங்களுக்கான பாராளுமன்றக் குழுவின் (கோப் குழு) தலைவராக சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவும், பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழு (கோபா குழு) தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமும் நியமிக்கப்பட்ட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்லவிடம் வினவிய போது, இது தொடர்பான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் சரித ஹேரத், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது சபையில் பொது விவகாரங்களுக்கான பாராளுமன்ற குழுவின் தலைவராக பணியாற்றினார்.
பேராசிரியர் திஸ்ஸ விதாரண இதற்கு முன்னர் பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.
COPE மற்றும் COPA ஆகியவை பாராளுமன்றத்தின் இரண்டு முக்கிய குழுக்களாகும், அவை பொது நிறுவனங்களில் ஊழல், மோசடி, முறைகேடுகள் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணைகளை நடத்தி பரிந்துரைகளை வழங்குகின்றன.
நாடாளுமன்றத்தின் சகல குழுக்களின் தலைவர் பதவியையும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் அண்மையில் நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.
அப்போது, சபாநாயகர் அதற்கு தெளிவாக ஒப்புக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.
நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக எதிர்க்கட்சியைச் சேர்ந்த கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நியமிக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழு அண்மையில் தீர்மானித்தது.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு முடிவடைந்த நிலையில் இரத்து செய்யப்பட்ட குழுக்களில் சில (கிட்டத்தட்ட எழுபது எண்ணிக்கை) நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய குழுக்கள் எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.