web log free
April 29, 2025

ஜனாதிபதி ரணில் ஜப்பான் சென்று வந்த பின்னரே கோட்டாபய நாடு திரும்புவார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் பின்னர் இலங்கை திரும்புவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின் பின்னரே இது இடம்பெற்றுள்ளது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி இன்னும் சில வாரங்களுக்கு தாய்லாந்தில் தங்கியிருப்பார் எனவும், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று (24ஆம் திகதி) இந்த நாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவித்தமை பொய்யானது எனவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதியின் வருகைக்காக மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள வீட்டிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், அது பொய்யானது எனவும், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மாத்திரமே அங்கு ஒரு மாதத்திற்கு மேலாக பாதுகாப்பில் உள்ளனர் எனவும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

தாய்லாந்து வந்தடைந்த பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கியிருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதிக்கு பணிப்புரை விடுத்திருந்த நிலையில் அடுத்த வாரம் முதல் விசேட பாதுகாப்பின் கீழ் தேவையான இடங்களுக்கு செல்ல அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd