web log free
November 29, 2024

ராஜபக்ஷக்களுக்கு தனிச் சட்டம் இல்லை - நாமல் ராஜபக்ஷ பேச்சு

"அமைச்சு பதவி கிடைத்தால் நான் அதை மனதார ஏற்றுக்கொள்வேன். ராஜபக்ச குடும்பத்தில் எவரும் இனிமேல் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க முடியாது என்று எந்த சட்டத்திலும் இல்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்ப்பு போராட்டங்களையடுத்து ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் அமைச்சு பதவிகளிலிருந்து ஏப்ரல் மாதம் விலகியிருந்தனர். இந்நிலையில், மே மாதம் 9ஆம் திகதி மகிந்த ராஜபக்சவும், ஜூன் மாதம் 9ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவும் முறையே பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவிகளிலிருந்து விலகினர்.

பதவி விலகி நாட்டைவிட்டுத் தப்பியோடிய கோட்டாபய மீண்டும் நாடு திரும்பியுள்ள நிலையில் இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டபோது ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த சசீந்திர ராஜபக்சவுக்கு பதவி வழங்கப்பட்டது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் மேலும் சிலருக்கு வழங்கப்படவுள்ளன எனவும், அதில் நாமல் ராஜபக்சவும் உள்ளடக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அமைச்சு பதவி இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது, "எனக்கு எந்த அமைச்சுப் பதவி பொருத்தம் என்பதை ஜனாதிபதி தான் தீர்மானிக்க வேண்டும். அது தொடர்பில் நான் தீர்மானிக்க முடியாது. நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. எனவே, மீளவும் அமைச்சுப் பதவி கிடைத்தால் அதனூடாக மூவின மக்களுக்கும் மென்மேலும் சேவையாற்றுவேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd