பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடத்தை பார்வையிடுவதற்கான டிக்கட் விற்பனை மூலம் நேற்று ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, முதல் நாள் வருமானம் 15 லட்சம் ரூபாவை அண்மிக்கும் என தாமரைக் கோபுர தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, நேற்று 2612 பேர் கொண்ட குழுவொன்று தாமரைக் கோபுரத்தை பார்வையிட வந்துள்ளதாகவும் அவர்களில் 21 வெளிநாட்டவர்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு பேர வாவிக்கு அருகில் 30,600 சதுர மீற்றர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்ட தாமரைக் கோபுர கட்டிடம் நேற்று முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
அதன்படி வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் பகல் 12 மணி முதல் இரவு 12 மணி வரையிலும் தாமரைக் கோபுரத்தை தரிசிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.