web log free
November 29, 2024

கம்பனிகளுக்கு செந்தில் தொண்டமான் எச்சரிக்கை, மஸ்கெலியா பிளான்டேசனுக்கு காலக்கெடு

“ எவ்வாறு தொழிற்சங்க பலத்தை காட்ட வேண்டும் என்பது தொடர்பில் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான், காங்கிரஸில் உள்ள எங்கள் அனைவருக்கும் சிறப்பாக பயிற்றுவித்துள்ளார்.

எதிர்வரும் 10 ஆம் திகதி மஸ்கெலியா பிளாண்டேசனுக்கு உட்பட்ட பகுதிகளில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் எமது பதிலடி தீவிரமாக இருக்கும்" என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மஸ்கெலியா பெருந்தோட்டத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களின் தோட்ட தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில்  மஸ்கெலியா அம்பாள்ஸ் மண்டபத்தில் குறித்த தோட்ட தொழிலாளர்களை பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தலைவர், தவிசாளர் உறுப்பினர்கள், ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, 

 " டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதால் தேயிலை ஏற்றுமதிமூலம் சிறந்த வருமானம் கிடைக்கின்றது. தற்போதைய சூழ்நிலையில் தொழிலாளர் ஒருவர் 4 கிலோ பச்சைக்கொழுந்து எடுத்தாலே அவர்களின் சம்பளம் ஈடாகிவிடுகின்றது. அதற்கு அப்பால் பறிக்கப்படும் கொழுந்துமூலம் கம்பனிகளே இலாபம் அடைகின்றன. அதாவது நாளொன்றுக்கு சுமார் 6 ஆயிரம் ரூபாவரை உழைத்துக்கொடுத்துவிட்டே தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா பெறுகின்றனர்.

மஸ்கெலியா பிளாண்டேசன், எதிர்வரும் 10 , 11 ஆம் திகதிக்குள் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். மாறாக இழுத்தடிப்பு இடம்பெற்றால், பெருந்தோட்டத்தை அரசாங்கம் சுவீகரிக்க வேண்டும். அரச நிறுவனத்தால் பராமரிக்க முடியவில்லையெனில், தொழிலாளர்களுக்கு காணியை பகிர்ந்தளிக்க வேண்டும்.

சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் போன்ற எமது மறைந்த தலைவர்கள் காங்கிரஸின் உள்ள அனைவருக்கும், தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் பயிற்சியளித்துள்ளனர். அவர்கள் காட்டிய வழியில் பயணிக்கின்றோம். எனவே, தொழிலாளர்கள் தளர்ந்துவிடக்கூடாது.

இதைவிட பயங்கரமான போராட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம். ஒற்றுமையாக இருங்கள். “ - என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd