ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் பங்குபற்றலுடன் நடைபெற்ற “தேசிய பேரவையின்” முதலாவது கூட்டத்தில் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் இரு உப குழுக்களை அமைக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
தேசிய பேரவையில் முதலாவது கூட்டத்தில் இரு உப குழுக்களை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பது மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் மத்திய கால நிகழ்ச்சித்திட்டத்தை உருவாக்குவது தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது என்பனவே இந்த உப குழுக்கள் அமைக்கப்படுவதற்கான நோக்கங்களாகும்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களின் தலைமையில் இன்று (29) பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்ற “தேசிய பேரவையின்” முதலாவது கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல, அமைச்சர் டிரான் அலஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான அசங்க நவரத்ன, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், மனோ கணேசன், பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான், சிசிர ஜயகொடி, நாமல் ராஜபக்ஷ, ஜோன்டன் பெர்னாந்து, சாகர காரியவசம், அலி சப்ரி ரஹீம், ரோஹித அபேகுணவர்தன, வஜிர அபேவர்தன, சிவநேசதுரை சந்திரகாந்தன், சம்பிக ரணவக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டிருந்தார்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன 20.09.2022 ஆம் திகதி தேசிய பேரவையை உருவாக்குவது தொடர்பான பிரேரணையைப் பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்ததுடன், இப்பிரேரணை எதிர்ப்பு இன்றி அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய இதுவரை பெயரிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகர் கடந்த 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.
தேசிய பேரவையின் முதலாவது கூட்டத்தின் பின்னர் பிரதமர் தினேஷ் குணவர்த்தன கருத்துத் தெரிவிக்கையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேசிய பேரவையின் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
தேசிய ரீதியில், பாராளுமன்றத்தின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், பொது மக்களுக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையில் காணப்படும் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துவதற்கும் திறக்கப்பட்ட புதியதொரு கதவாக இது அமையும் என்றும் குறிப்பிட்டார்.
சகல பாராளுமன்ற அமர்வு வாரத்திலும் வியாழக்கிழமை தேசிய பேரவையைக் கூட்டுவதற்கும் இன்று (29) தீர்மானிக்கப்பட்டது.