web log free
November 28, 2024

மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு இருக்கும் தடைகள் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கும் ஏற்படும் - சம்பிக்க ரணவக்க

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையையும் அரைவாசிக்கு குறைக்கவேண்டி ஏற்படுகின்றது.

அவ்வாறு இடம்பெற்றால் மீண்டும் எல்லை நிர்ணயம் மேற்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது. அதனால் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் முயற்சியை தடுப்பதற்காகவா அரசாங்கம் இதனை மேற்காெள்கின்றது என்ற சந்தேகம் எழுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொகுதி அடைப்படையிலும் நூற்றுக்கு 25வீத பெண் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்பட வேண்டும் என்ற நியதியின் அடிப்படையிலாகும்.

அதேநேரம் தொகுதி அடைப்படையில் வெற்றிகொள்ள முடியாத கட்சிகளுக்கு, அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற வாக்கு வீதத்தின் பிரகாரம் உறுப்பினர்கள் தெரிவு செய்துகொள்ளும் சிக்கலான முறையும் இதில் இருக்கின்றது.

அதனால்தான் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையிலும் பார்க்க மூன்றில் இரண்டுக்கும் அதிகமான உறுப்பினர்கள் தேவைப்பட்டது. அதனால் தற்போது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அரைவாசிக்கு குறைக்கவேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு உறுப்பினர்களின் எணணிக்கையை குறைப்பதாக இருந்தால் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையையும் அரைவாசிக்கு குறைக்கவேண்டி ஏற்படுகின்றது. அவ்வாறு இடம்பெற்றால் எல்லை நிர்ணயத்துக்கும் செல்லவேண்டி ஏற்படுகின்றது.

தற்போது மாகாணசபை தேர்தல் நடத்துவதற்கு தடையாக இருப்பதும் எல்லை நிர்ணயமாகும். எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை இதுவரை பிரதமர் கையளிக்காமல் இருப்பதனாலே இது இழுபறியில் இருக்கின்றது.

இந்த சாதாரண காரணத்தினால் மாகாணசபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்து அனுப்பும் மக்களின் உரிமையை இல்லாமலாக்கி இருக்கின்றது. அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தல் கடந்த வருடம் மார்ச் மாதத்திலேயே இடம்பெற இருந்தது, என்றாலும் அப்போது நாட்டில் தேர்தல் நடத்தக்கூடிய சூழல் இருக்கவில்லை.

அதனால் தேர்தலை ஒருவருட காலத்துக்கு பிற்போடுவதற்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நடவடிக்கை எடுத்தார். அதன் பிரகாரம் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அந்த ஒருவருட காலத்தில் 6 மாதத்துக்கு பின்னர் தே்ர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கின்றது.

அதன் பிரகாரம் செப்டம் மாதத்தில் இருந்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தற்போது கிடைக்கப்பெற்றிருக்கின்றது. அதன் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாத்துக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு முடியும்.

எனவே தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு எடுக்கும் முயற்சியை தடுப்பதற்காகவா ஜனாதிபதி உட்பட அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றதா என்ற சந்தேகம் எமக்கு இருக்கின்றது என தெரிவித்தார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd