இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெள்ளிக்கிழமையன்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார், அங்கு இருவரும் இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசிற்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பலதரப்பட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.
கலந்துரையாடலின் போது சீனாவின் சோசலிசக் கட்டமைப்பில் புதிய மைல்கல்லாக அமையவுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்வரும் 20ஆவது தேசிய மாநாட்டிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து, முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ, ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிடம் வாழ்த்துக் கடிதத்தை கையளித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவின் வாழ்த்துக்களுக்கு மேன்மைதங்கிய Qi Zhenhong நன்றி தெரிவித்ததுடன் இலங்கையும் சீனாவும் நட்புறவு நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஆகியவற்றின் நீண்ட வரலாற்றைப் பகிர்ந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இலங்கை தற்போது சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், ஆனால் நாடு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்புவதாகவும்Qi Zhenhong குறிப்பிட்டார். இலங்கையின் சவால்களை வெற்றிகொள்வதற்கு சீனாவின் உதவியை அவர் உறுதியளித்தார்.