ராஜபக்சவின் குடும்ப ஆட்சியை அகற்றி ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தவறான செயற்பாடுகளை மீள்பரிசீலனை செய்வதற்கும், அந்தத் தவறான செயற்பாடுகள் மீண்டும் இடம்பெறாத வகையில் பணிகளை முன்னெடுப்பதற்கும் கட்சியின் சிரேஷ்டர்கள் குழுவொன்று தற்போது செயற்பட்டு வருகின்றது.
அதன்படி கட்சியை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் முதலில் கட்சிக்குள் ஜனநாயகம் உருவாக்கப்பட வேண்டும், கட்சிக்கு மத்திய குழுவும் செயற்குழுவும் இருக்க வேண்டும் என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு அதற்கு கட்சியும் இணக்கம் தெரிவித்துள்ளது.
ராஜபக்ச குடும்பத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது என மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் எதிர்பார்த்ததாகவும் ஆனால் அது நடக்கவில்லை என்பது தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய அதனை விரும்பவில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஆனால் ராஜபக்ஷக்கள் அதிகளவான மக்களுக்கு அமைச்சரவை அமைச்சர்களை வழங்கியதாகவும் இவை தவறான தீர்மானங்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியில் ஜனநாயகத்தை உருவாக்குவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு பசில் ராஜபக்ஷவும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அந்த கலந்துரையாடல்களில் பசில் ராஜபக்ஷவும் கலந்து கொண்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
"அவரும் ஒப்புக்கொள்கிறார். அவரும் அந்த விவாதங்களுக்கு வந்தார். அது இல்லாமல் சாத்தியமில்லை. இதை செய்யவில்லை என்றால் இந்த கட்சியே உடைந்து விடும். இத்தனை விஷயங்களுக்குப் பிறகும் கட்சிக்கு புரியவில்லை என்றால் கட்சி இன்னும் உடைந்து விடும். நான் புரிந்து கொண்ட வரையில், கட்சியில் இந்தக் கருத்துக்காக நான் பெரிய போராட்டத்தை நடத்தி வருகிறேன். எனது நாவலப்பிட்டி சந்திப்பில் எமது செயற்பாட்டாளர்களை நான்கு கதைகளை கேட்க வைக்கிறேன். பந்துல குணவர்தன, ரமேஷ் பத்திரன, காஞ்சன விஜேசேகர ஆகியோர் பேசுகின்றனர். ஒருவர் நாட்டின் பொருளாதாரம் பற்றி பேசுகிறார். அடுத்தவர், நாட்டில் ஊட்டச்சத்து உணவுப் பற்றாக்குறை ஏற்படுமா என்று பேசுகிறார். எரிபொருள் நெருக்கடி பற்றி காஞ்சனா பேசுகிறார். நாம் புதிய வழியில் செல்ல வேண்டும். நாம் ஒரு புதிய வழியில் செல்ல வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முன்பு போல் தொடர்ந்தால், நம் வாழ்வில் அரசுகளை உருவாக்க வேண்டியதில்லை. எனவேதான் கட்சியின் இளைஞர்களுக்கு பதவி வழங்க வேண்டும். புதிய முகத்தைப் பெற வேண்டும். இந்த சம்பவங்களின் பின்னர் மகிந்த ராஜபக்ச மற்றும் பாராளுமன்ற குழு பசில் ராஜபக்ஷ உட்பட அனைவரையும் சந்தித்தோம். அங்கே நாம் பேசியதைச் சொன்னேன். பசில் ராஜபக்ஷவும் அதனை ஏற்றுக்கொண்டார். ரமேஷ் பத்திரன, காஞ்சனா விஜேசேகர போன்ற இளைஞர்களுக்கு கட்சியில் இடம் கொடுக்க வேண்டும். நாமல் ராஜபக்ஷ நல்லவர். மேலும் மற்றவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். கட்சிக்கு புதிய முகத்தை கொடுத்து, புதிய வேலைத்திட்டத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும்" என்றார்.