அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை ஜனநாயகத்தை மதிக்கும் இலங்கையின் அனைத்து பிரஜைகளுக்கும் கிடைத்த வெற்றி என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய இன்று தெரிவித்துள்ளார்.
"சமூக நீதிக்கான தேசிய இயக்கம், இந்த அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்காக தொடர்ந்து வாதிடும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், சிவில் மற்றும் அரசியல் சக்திகளுக்கும் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று அவர் கூறினார்.
இலங்கையை சதிகார ஆட்சிக்கு மாற்றும் நோக்கில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்து 22ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை நாடாளுமன்றம் இன்று நிறைவேற்றியுள்ளது என்றார்.
"முன்னாள் ஜனாதிபதியின் அபிலாஷைகளை அடைவதற்காக 20A அறிமுகப்படுத்தப்பட்டபோது அதை கடுமையாக எதிர்த்த ஒரு அமைப்பாக நாங்கள் முன்னின்று செயல்பட்டு உள்ளேன் .
“இன்று பாராளுமன்றத்தால் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானமானது ஒரு மிக முக்கியமான இடைக்கால அரசியலமைப்பு சீர்திருத்தமாக நாங்கள் கருதுகிறோம், இது புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
அதன்படி, இதை குறிப்பிடத்தக்க சாதனையாக கருதுகிறோம். சமூக நீதிக்கான தேசிய இயக்கம், மக்களுக்கு கண்ணியம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் புதிய அரசியலமைப்பிற்காக எப்போதும் அசைக்காமல் நிற்கிறது.
இத்தருணத்தில், அனைத்து அரசியல் சக்திகளும் இந்த சாதனையால் வலுப்பெற்று, ஜனநாயகத்தை வலுப்படுத்தி, நாட்டை மக்களின் நலனுக்காக எடுத்துச் செல்லும் இந்தப் பணியில் முன்னின்று செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சமூக நீதிக்கான தேசிய இயக்கம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும், நாட்டில் இருந்து பாரிய ஊழலை ஒழிப்பதற்கும் தொடர்ந்து முன்னின்று செயற்படும்” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.