web log free
May 09, 2025

விகாரைக்குள் பாலியல் சேட்டை புரியும் பிக்குகளின் கவனத்திற்கு!

விகாரைகளில் சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் தொடர்பில் பௌத்த அலுவல்கள் ஆணையாளரிடம் உடனடியாக அறிக்கை கோரியுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறு பிள்ளைகளை பிக்குவாக மாற்றுவது என்ற பெயரில் விகாரைகளுக்கு அழைத்து வந்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு தாம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், விகாரைகளில் இவ்வாறான தவறுகளை செய்பவர்கள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான குற்றங்களை சட்டரீதியாக எவ்வாறு கையாள்வது என்பது குறித்து தாம் ஆராய்வதாக தெரிவித்த விக்கிரமநாயக்க, இது தொடர்பில் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தாம் நம்புவதாகவும் சுட்டிக்காட்டினார்.

விகாரைகள்  சட்டம் மற்றும் தேரவாத துறவி சொற்பொழிவு சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும், இது போன்ற தவறான செயல்களை தடுக்க வாய்ப்பு உள்ளதா என்பதைக் கண்டறிந்து சில யோசனைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சட்டங்கள் காலத்திற்கேற்ப திருத்தப்பட வேண்டும் என்றும், இந்தச் சட்டங்களில் விகாரை விவகாரங்கள் தொடர்பான கடப்பாடு இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இவ்வாறான விடயங்களில் நிரந்தர தீர்வுகளை காண முடியாது என தெரிவித்த அவர், தவறு செய்யும் பிக்குகளின் அங்கிகளை கழற்றுவது போன்ற தண்டனைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

Last modified on Tuesday, 25 October 2022 09:57
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd