நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் பரவின.
ஆனால் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று (27) புத்தளம், ஆராச்சிக்கட்டில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் "ஒன்றாக எழுவோம்" மேடையில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் ஏறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீடு செயற்பாட்டாளர்களால் எரிக்கப்பட்ட இடத்தில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொது பேரணியில் கலந்துகொள்வதற்கு முன்னர் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, முன்னாள் அமைச்சர்களான காமினி லோக்குகே, நாமல் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே, சம்பத் அத்துகோரல உள்ளிட்டோருடன் அமைச்சர் விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.
கூட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்ற அமைச்சர், கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுடன் கலந்துரையாடிய பின்னர், நாடாளுமன்றத்தில் இன்று (27) நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கொழும்பு புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடந்த வாரம் வெளிநாட்டில் இருந்ததால், 22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் அவர் பங்கேற்கவில்லை.
இதற்கிடையில் அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையப் போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்த தருணத்தில் ஆதரவு தெரிவிப்பது யானை மீது பயணம் செய்வதாக அமையாது என கூறினார்.
ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிப்பது யானை மீது சவாரி செய்வதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.