2023 ஜனவரியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் ரணிலுடன் கலந்துரையாடியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கை மற்றும் முதிர்ச்சியின் அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருவதால், ரணிலுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்குவதே மிகச் சரியான முடிவு என மொட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நாட்டுக்கு கடுமையான பொருளாதார முகாமைத்துவம் தேவைப்படுவதாகவும், அதற்கு மிகவும் பொருத்தமான அரசியல் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே என தமது கட்சியில் உள்ள பெரும்பாலானோர் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரம்பரிய அரசியலில் இருந்து விடுபடாமல் புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்காவிட்டால் இனி எந்த அரசியல்வாதியும் பிழைக்க மாட்டார் எனவும் எனவே கட்சி முத்திரை குத்தப்பட்ட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.