web log free
December 05, 2023

நான்கு வயது மகளை துன்புறுத்திய தந்தை

யாழ்ப்பாணம் – கரம்பன் பகுதியில் 4 வயது சிறுமி தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பில் சிறுமியின் தந்தை தேடப்படுகிறார். 

கரம்பனில் தனது 4 வயது மகளை தந்தை ஒருவர் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

சிறுமியை தாக்கிய நபர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் வாய் பேச முடியாத பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். அப்பெண்ணையும் அவருக்கு பிறந்த குழந்தையையும் விட்டு அந்நபர் பிரிந்து சென்றுள்ளார். 

மூன்று வருடங்களாக எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்த நபர் மீண்டும் கடந்த வாரம் குழந்தையையும் தாயையும் அழைத்துச் சென்று யாழ்ப்பாணம் – சுருவில் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் 4 வயது சிறுமியை கொடூரமாகத் தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்நபர் தலைமறைவாகியுள்ளார். 

வாய் பேச முடியாத தாயையும் அவரது நான்கு வயது மகளையும் ஊர்காவற்துறை பொலிஸார் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியிலிருந்து மீட்டுள்ளனர். 

அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதான தந்தையை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.