ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சுப் பதவிகளைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கொழும்பு டொரிங்டன் பிளேஸில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அண்மைய கலந்துரையாடல் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக நீடித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவன்ன, ஜகத் புஷ்பகுமார, சாமர சம்பத் திஸாநாயக்க, கலாநிதி சுரேன் ராகவன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைமைத்துவம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் கட்சியின் தலைமைத்துவத்திற்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் எதிர்காலத்தில் தமது இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
1994ஆம் ஆண்டு முதல் கட்சியை ஆட்சி செய்த தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பை எந்த காலத்திலும் மாற்றவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஆனால் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் கட்சியின் அரசியலமைப்பு கூட மாற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறான நெருக்கடிகள் வந்தாலும் கட்சியை அழிப்பதற்கு இடமளிக்கக் கூடாது, அதனைப் பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.