web log free
April 19, 2024

இலங்கையில் 56000 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவு

UNICEF இன் சமீபத்திய அறிக்கையில் இலங்கையில் சுமார் 56,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவசர உதவி தேவைப்படுவதாகவும் காட்டுகிறது.

இலங்கையில் 22 இலட்சம் சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 286 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் 4.8 மில்லியன் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என யுனிசெஃப் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு பெப்ரவரி வரையிலான காலப்பகுதியில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையும் என்றும், 6.2 மில்லியன் மக்கள் மிதமான உணவுப் பற்றாக்குறையாலும், 66,000 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள ஒவ்வொரு 5 குடும்பங்களிலும் 2 குடும்பங்கள் தமது மாதாந்த சம்பளத்தில் 75 வீதத்தை தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்ய செலவிடுவதாகவும், அதனால் அந்தக் குடும்பங்கள் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக மிகக் குறைந்தளவே ஒதுக்க முடியும் எனவும் அறிக்கை காட்டுகிறது. 

பணவீக்கம் காரணமாக பெரும்பாலான குடும்பங்கள் தங்களது சேமிப்பில் பெரும்பகுதியை செலவழித்துள்ளதாகவும், அந்த குடும்பங்கள் தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் கடும் சிக்கலை எதிர்கொள்வதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.