சீனாவில் கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது அந்நாட்டு அரசு.
சமீபகாலமாக சீனாவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது.
கொரோனா கட்டுப்படுத்தும் நோக்கில் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய நகரங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
சீனாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 31,444 ஆக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாகாணங்களில் கட்டுப்பாடுகளும், ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களில் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் நடத்தவும் அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது.
இந்நிலையில் செங்சோவின் 8 மாவட்டங்களில் வசிப்பவர்கள் நாளை முதல் 5 நாள்களுக்கு உணவு வாங்கவும், மருத்துவச் சிகிச்சைக்கும் வெளியே வருவதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தெற்கில் உள்ள குவாங்சோவின் உற்பத்தி மையத்திலிருந்து வடக்கே பெய்ஜிங் வரையிலான வணிகங்கள் மற்றும் குடியிருப்பு சமூகங்கள் பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பெய்ஜிங்கில் ஒரு கண்காட்சி மையத்தில் கொரோனாவுக்கான மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கு, போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு தீவிர கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.