நாட்டின் பல பகுதிகளில் மண்ணெண்ணை கொள்வனவு செய்வதற்கு மக்கள் இன்றும் (03) நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
இதன்படி ,பல பகுதிகளில் மண்ணெண்ணை தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
மின்சார ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளமையினால், மின்சாரம் தடைப்படும் என வெளியான தகவல்களின் பின்னரே, மக்கள் மண்ணெண்ணை கொள்வனவு செய்ய நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
மேலும் ,எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மின்சாரம் தடைப்படாது எனவும், அவ்வாறு மின் தடை ஏற்பட்டால் அதனை விரைந்து வழமைக்கு கொண்டு வருவதாகவும் மின்சார சபைத் தலைவர் நேற்று உறுதியளித்திருந்தார்.
எதிர்வரும் நாட்களில் சமையல் எரிவாயுவின் விலை தவிர்க்க முடியாது அதிகரிக்க நேரிடும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பால், இலங்கையில் விலையை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பின்னணியில் அமைச்சர் இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்போது நாளொன்றுக்கு சுமார் 70-90 மெட்ரிக் தொன் எரிவாயுவை உற்பத்தி செய்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண இதனை தெரிவித்துள்ளார். எனினும், இந்த தொகை நாட்டின் எரிவாயு தேவையில் 5 வீதம் முதல் 10 வீதம் வரையே பூர்த்தி செய்யமுடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் சமையல் எரிவாயு பற்றாகுறை தீர்க்கப்படும் என கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார்.
லிட்ரோ கேஸ் நிறுவனம் தற்சமயம் பழைய விலையிலும் லாfப் கேஸ் நிறுவனம் அதன் புதிய விலையிலும் எரிவாயுவினை விற்பனை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.