அரசாங்கத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி மற்றும் ஊர்வலம் இன்று (02) கொழும்பில் நடைபெறவுள்ளது.
இன்று பிற்பகல் 3.00 மணிக்கு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு முன்பாக இந்த எதிர்ப்பு பேரணி ஆரம்பமாகி அதன் முடிவில் பேரணியொன்று நடத்தப்படவுள்ளது.
'அடக்குமுறை, பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிராக, உரிமைகளுக்காகப் போராடுவோம்' என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இளம் சட்டத்தரணிகள் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம், இலங்கை தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், உட்பட பல தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.
சமகி ஜன பலவேகய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சுதந்திர தேசியப் பேரவை, சோசலிசக் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டாலும் ஜே.வி.பி கலந்து கொள்ள வாய்ப்பில்லை.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 4 வகையான உணவு வகைகளின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ரோல்ஸ், பரோட்டா, முட்டை ரொட்டி, காய்கறி ரொட்டி ஆகியவற்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு சாதாரண தேநீர் 30 ரூபாவிற்கும், ஒரு பால் தேநீர் 100 ரூபாவிற்கும் விற்பனை செய்ய எதிர்பார்க்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
பொரளை சிறிசுமண தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திலினி பிரியமாலி செய்ததாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகளின் போது தெரியவந்த உண்மைகளுக்கு அமைய பொரளை சிறிசுமண தேரர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நடிகை ரம்பா சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. கனடாவில் குழந்தைகளுடன் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது சிறிய அளவிலான விபத்து ஏற்பட்டதாக நடிகை ரம்பா இன்ஸ்டாவில் தகவல் தெரிவித்துள்ளார். மகள் சாஷா மருத்துவமனையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து தனியான குழுவாக அமைவதற்கு மற்றுமொரு அமைச்சர்கள் குழு தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை வகிக்கும் பலர் இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் அதே வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
தற்போது பதவிகள் இல்லாமல் இருக்கும் மொட்டு எம்.பி.க்கள் குழுவும் இதில் இணைவதற்கு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நேரடியாக இணையாமல் தனியான குழுவாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் நோக்கில் இக்குழு தனித்தனியாக ஒழுங்கமைக்க தயாராகி வருவதாக அறியமுடிகிறது.
நிதி மோசடி குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண்ணுடன் ராஜபக்ச அரசாங்கத்தில் உள்ள பெருமளவானோர் நேரடித் தொடர்பில் இருப்பதாக முன்னாள் இராணுவ அதிகாரியான ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் திலினியின் நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக அவர் கூறுகிறார்.
சட்டவிரோதமாக சம்பாதித்த பணம் இந்த பெண்ணிடம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இவ்வாறு பணத்தை முதலீடு செய்த பல அரசியல்வாதிகள் தொடர்பில் இணைய சேனலொன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலில் அவர் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து பிரதான கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் செயற்பாட்டாளர்களின் சம்மதத்தின் அடிப்படையில் அனைவரையும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கொண்டு வருவதற்கான புதிய வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தை விரைவில் தயாரித்து அதற்கேற்ப கட்சியின் எதிர்கால செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட அரசியல் கூட்டத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
நாட்டில் நாளுக்கு நாள் மாறிவரும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சமகி ஜன உட்பட சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான பிரபல பிரதிநிதிகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களை ஒன்று திரட்டும் பணிகளை ஆரம்பிக்குமாறும் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
கெப்பிதிகொல்லேவ பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற அமைதியின்மையின்போது இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நிலையில், பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பிக்கு ஒருவர் உட்பட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் - கெப்பிதிகொல்லேவ பிரதேசத்தில் யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
அதன்பின்னர் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து நேற்று (31) இரவு அங்கு கடுமையான பதற்றம் நிலவியது.
போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டிருந்தார். இதனால் காயமடைந்த அவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், ஒவ்வொரு மாதமும் 1ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவுள்ளது.
அதன்படி இன்று (31) அல்லது நாளை (01) திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் காரணமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் எரிபொருள் விலை குறையும் என்ற நம்பிக்கையில் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை ஆர்டர் செய்வதில் தாமதம் செய்கின்றனர்.
இதன் காரணமாக இன்று (31) முதல் ஹட்டனில் உள்ள சிபெட்கோ மற்றும் ஐஓசி பெற்றோல் நிலையங்களில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஐஓசி பெற்றோல் நிலையத்தின் கையிருப்பில் இருந்து 95 ஒக்டேன் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் பெற்றோல் வாகனங்கள் காணப்பட்டன.
நேற்று (30) பிற்பகல் முதல் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலை காரணமாக 95 ஒக்டேன் எரிபொருளை தமது வாகனங்களுக்கு பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹிக்கடுவ, திரானகம சந்தியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுள்ளனர்.