மின்வெட்டை தவிர்ப்பதற்கு போதுமான எரிபொருளை பெற்றுக்கொடுக்க எரிசக்தி அமைச்சருக்கு உத்தரவிடுமாறு கோரி, பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளது.
தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க முடியாமையினால், பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தீர்ப்பளிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
நிதி அமைச்சு, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, நாணய சபை, மத்திய வங்கியின் ஆளுநர், மின்சார சபை, அரசாங்க நிறுவனங்களின் அனைத்து பங்குதாரர்களும் மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மின்வெட்டினை தவிர்ப்பதற்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக 200 மில்லியன் டொலர்களை ஒதுக்குமாறு நிதி அமைச்சர், திறைசேரி செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோருக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு 2016 ஆம் ஆண்டு முதல் அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு பலமுறை கடிதங்களை அனுப்பி வைத்துள்ள போதிலும் அது தொடர்பில் எந்த நிறுவனமும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, அதுவே தற்போதைய நெருக்கடிக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
மின் உற்பத்தியை துரிதமாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தாம் அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதாகவும், 2015 ஆம் ஆண்டின் பின்னர் பாரிய மின்னுற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லையெனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் முடிவதற்குள் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதற்காக எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பணம் தேவையெனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்சார உற்பத்திக்கு தேவையான போதுமானளவு எரிபொருள் கிடைக்காமையே, மின்வெட்டுக்கான காரணம் என தெரிவித்துள்ள ஆணைக்குழு, அது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதி அமைச்சினை அறிவுறுத்த தாம் நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் மின்சார உற்பத்தியை துரிதப்படுத்தவும், எரிபொருளை வழங்கவும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மனுவில் கோரியுள்ளது.
சட்டத்தரணி யொஹான் குரே, நிரஞ்சன் அருள் பிரகாசம், சமித் சேனாநாயக்க, ஹர்ஷ பெர்னாண்டோ மற்றும் சட்டத்தரணி G.G. அருள்பிரகாசம் ஆகியோரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் இல்லத்திற்கு அருகில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேயரின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக இவ்வாறு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொரட்டுவ குருச சந்தி பகுதியில் இருந்து காலி வீதியை மறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னர் வில்லோராவத்தை பகுதியிலுள்ள மொரட்டுவ மேயரின் இல்லத்திற்கு பேரணியாக சென்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.சாமர சம்பத் தசநாயக்க சென்ற வாகனம் மீது முட்டைவீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதுளை மாவட்ட எம்.பியான இவர், வெல்லவாயவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொள்ள சென்றபோது முட்டைவீச்சி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் மலர், செடிகள் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காகச் சென்ற ஷிரந்தி ராஜபக்சவிடம் மக்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.
நுவரெலியாவிற்கு மலர் செடிகள் கண்காட்சி இன்று ஆரம்பிக்கவிருந்தது. அந்நிகழ்வை ஆரம்பித்து வைப்பதற்காக ஷிரந்தி ராஜபக்ச அங்கு சென்றிருந்தார்.
இதன்போது அரலியா ஹோட்டல் பெட்ரோல் கொட்டகைக்கு அருகில் உள்ள மக்கள் அவரை பார்த்து ஏளனம் செய்து, சாலையை அடைத்துள்ளனர்.
இதனால் அவர் விழாவில் கலந்து கொள்ளாமல் மீண்டும் கொழும்பிற்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிரிஹான பெங்கிரிவத்த மாவத்தைக்கு அருகில் அமைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு பிரவேசிக்கும் நுழைவாயில் வீதியை மறித்து நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கலகம் விளைவிக்கும் வகையில் நடந்துக் கொண்ட 54 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.
குறித்த சந்தேகநபர்களுக்கு இடையில் பெண் ஒருவரும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நுகேகொட ஜூபிலி தூண் பகுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு இடையில் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் குழுவொன்று வன்முறைச் சூழலை ஏற்படுத்தியமை தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இரும்புக் ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளுடன் ஆயுதம் ஏந்திய குழுவினர், ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு, மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறையில் ஈடுபட்டவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம் என கோசமிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலவரக்காரர்கள் திட்டமிட்ட வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட்டு நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தியுள்ளமை கைது செய்யப்பட்ட நபர்கள் மூலம் தெரியவந்துள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றிரவு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாத குழு ஒன்று இருந்தமை தெரியவந்துள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் அரபு வசந்தம் ஏற்பட வேண்டும் என்று போராட்டத்திற்கு அவர்கள் தலைமை தாங்கினர்.
குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களைத் தூண்டிவிட்டு நாட்டை சீர்குலைக்கும் வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அநாமதேயமாக திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிரிஹானவில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் என 35 பேர் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பஸ், பொலிஸ் ஜீப், 2 மோட்டார் சைக்கிள் மற்றும் தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனம் சேதமாக்கப்பட்டுள்ளது.