தற்போது ‘எல் நினோ’ (El Niño) காலநிலை நிலைமை ஆரம்பித்துள்ளதாகவும், அது அடுத்த சில மாதங்களில் மேலும் வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 நவம்பர் முதல் 2027 ஜனவரி வரை இந்த நிலைமை 63% சாத்தியக்கூறுடன் மேலும் வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) தரவுகளை மேற்கோள்காட்டியுள்ள வானிலை ஆய்வு திணைக்களம், இந்த எல் நினோ நிலைமை மிகவும் தீவிரமான அளவுக்கு செல்லும் சாத்தியம் சுமார் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையால் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், குறிப்பாக வறண்ட வலயங்களில், வழமையை விட குறைவான மழைப்பொழிவு பதிவாகும் வாய்ப்பு உள்ளது. இதனால் நீர் வள முகாமைத்துவத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும், ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னர் வழமையை விட அதிக மழைப்பொழிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களின் அபாயமும் அதிகரிக்கக்கூடும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாத வாரியான முன்னறிவிப்பு:
- ஜூலை: மேல் மற்றும் தென் மாகாணங்களில் வழமையான மழைப்பொழிவு கிடைக்கும். நாட்டின் ஏனைய பகுதிகளில் வழமையை விட குறைவான மழை பெய்யக்கூடும்.
- ஆகஸ்ட்: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழமையை விட குறைவான மழைப்பொழிவு பதிவாகும் வாய்ப்பு உள்ளது.
- செப்டம்பர்: மேல் மற்றும் தென் மாகாணங்களில் வழமையை விட அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனைய பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக இருக்கக்கூடும்.
இந்த காலநிலை மாற்றங்கள் விவசாயம், நீர் வள முகாமைத்துவம், மின்சார உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைகள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, தொடர்புடைய துறைகள் தொடர்ந்து விழிப்புடன் செயல்பட வேண்டுமெனவும், பொதுமக்கள் திணைக்களம் வெளியிடும் புதுப்பிக்கப்பட்ட அறிவிப்புகளை அவதானமாக பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




