– பாதுகாப்பு பிரதி அமைச்சர்
இலங்கையிலிருந்து தப்பிச் சென்றுள்ள தேடப்படும் பிரபல குற்றக் கும்பல் உறுப்பினர் கஞ்சிபானி இம்ரானை மிக விரைவில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
“அதிட்டன முப்படையினர் கூட்டமைப்பின்” ஹம்பாந்தோட்டை மாவட்டக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு (Red Notice) மூலம் தேடப்பட்டு வந்த 58 சந்தேகநபர்கள் இதுவரை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அவர்களில் பல முக்கிய பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தேடப்பட்டவர்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது முக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் தலைமைத்துவத்தை இலக்கு வைத்து, அவர்களின் குற்றச் செயல்பாடுகளை முற்றாக கலைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள முக்கிய குற்றவாளிகளை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவதற்கு பெரும் முயற்சிகள் தேவைப்படுவதாகக் கூறிய அவர், அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், முன்னைய அரசாங்கத்துடன் தொடர்புடைய சில அரசியல் பிரமுகர்கள் ஆபத்தான குற்றவாளிகளுடனும், விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ஒருவருடனும் தொடர்புகளைப் பேணி வந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இதன் மூலம் அக்காலகட்டத்தில் சட்டத்தின் ஆட்சி எந்த நிலையில் இருந்தது என்பது குறித்து கேள்விகள் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள், சட்டத்தின் ஆட்சியின் அதிகாரத்தையும் மேலாதிக்கத்தையும் வெளிப்படுத்துவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மேலும் தெரிவித்தார்.




