பண்டிகைக் காலத்தில் முட்டைகளின் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலை மட்டத்திலேயே தொடர்ந்து பேணுவதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.
அத்துடன், பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியைத் தட்டுப்பாடின்றி சந்தைக்கு விநியோகிப்பதுடன், அதன் விலையை மேலும் குறைப்பதற்கும் கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் உறுதியளித்துள்ளன.
பண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சியைத் தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல், வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, மேலதிக செயலாளர் கில்மா தஹநாயக்க, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும், முட்டை மற்றும் கோழி இறைச்சி வர்த்தக சங்கங்கள், சிறிய மற்றும் பெரிய அளவிலான உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் கால்நடைத் தீவன உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இதில் பங்கேற்றனர்.
இதன்போது, சந்தையில் கோழி இறைச்சியின் விலை குறையும் போக்கு காணப்பட்டாலும், முட்டைகளின் விலையில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இதனடிப்படையில், பண்டிகைக் காலத்தில் முட்டைகளின் விலையை மேலும் அதிகரிக்காமல் தற்போதைய விலை மட்டத்திலேயே பேணுவதற்கு உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.




