பொதுவாகவே பெண்கள் பூவைப்போல ரொம்ப மென்மையானவர்கள் என்கிற கருத்து வெகு நாட்களாகவே உலவிவருகிறது. பெண்களின் வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சில பெண்கள், தங்களை வெளிப்படுத்த தயக்கங்களோடும் பயத்தோடும்தான் இருப்பதை மறுக்கமுடியாது. எனவே பெண்களுக்கு மிகவும் தேவையான குணங்களில் ஒன்று “மனவலிமை”. எப்போதும் எந்த ரூபத்திலும் பெண்களுக்கு பிரச்னை ஏற்படக்கூடிய சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எனவே பெண்கள் வீட்டிலும் வெளியிலும் சாதிக்க மனவலிமையோடு இருப்பது அவசியம். அதற்கு அடிப்படையான 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாமா?
எந்த ஒரு செயலைச் செய்யும்போதும், எதிர்விதமான விமர்சனங்கள் எழுவது இயல்பு அதிலும் பெண்கள் என்றால் அவை இரட்டிப்பாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே உங்கள் மீதான விமர்சனங்களை கடந்து வரவேண்டும். உங்களுக்கு உடன்பாடு இல்லாத விஷயம் முன்வைக்கப்பட்டால் துணிவோடு விமர்சனம் செய்யவும் தயங்கக்கூடாது. அதே போல் நிராகரிப்புகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டையுமே பாசிட்டிவ்வாக எடுத்துக்கொள்வதில் தான் உங்களின் மனவலிமை அடங்கி உள்ளது.
2. உங்களிடம் உள்ள திறமைகளை யாருக்காகவும் எவருக்காகவும் வெட்கப்பட்டு மறைக்கவோ, ஒடுக்கவோ செய்யாதீர். நம் திறமைகளை முதலில் அங்கீகரிக்கும் பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது. வெட்கம் எனும் தேவையற்ற சுமையைத் தூர எறியுங்கள்.
3. இலக்கை அடைவதற்கு தெளிவான சிந்தனை மற்றும் சோர்வில்லாத செயலும் மிகவும் முக்கியமானது. இவை சரியாக இருப்பதில் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு பெரிய பங்கு உண்டு. எனவே, பழகும் நபர்களைப் பற்றி நேர்மறையாகவோ எதிர்மறையாகவே முடிவெடுக்காதீர்கள். அவர்களின் செயல்களை ஊன்றிக் கவனித்து, தெளிவாக புரிந்துகொண்டுப் பழகுங்கள்.
4 .உங்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பிறரிடம் பேசும்போதும், அது எவ்வளவு கொடுமையானதாகவோ, கவலைத் தரக்கூடியதாக இருந்தாலும் உண்மையை மட்டுமே பதிவு செய்யுங்கள். ஏனெனில், இந்த உண்மைதான் உங்களின் மனவலிமையையும், தைரியத்தையும் அதிகரிக்கும்.
5. உங்களின் உள்ளுணர்விற்கு மதிப்பு கொடுங்கள். ஏனெனில், பெரும்பாலான சமயங்களில் அவை மிகச் சரியாகவே அமையும். ஒருவேளை உங்களின் உள்ளுணர்வும் நடப்பவையும் ஒரு சேர சரியாக அமைந்தால் உங்களுக்கே ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். அது நாம் எடுக்கும் முடிவுகள் சரிதான் என்ற மன தைரியத்தைக் கொடுக்கும்.
6. மனவலிமையோடு வாழ்வதென்பது, பிறரிடமிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்வதல்ல. பலரின் மத்தியிலும் நானும் ஒரு தனி இடத்தை பிடித்து காட்டுவேன் என்பதுதான். எனவே ஒரு உதவி தேவைப்படும் நேரத்தில் ஒரு நண்பனிடமோ சகோதரனிடமோ உதவிகள் கேட்பதோ தவறல்ல.
7. முதலில் உங்களை நேசிக்க பழகுங்கள். உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள். அதற்கு எதிரான பழக்கங்களை விட்டொழியுங்கள். உடல் ஆரோக்கியமாக இருப்பது நம் கனவுகளை நாம் அடையவதற்கு முக்கியமாக உதவும். உடல் வலிமை என்பது மன வலிமை சிறக்க மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
8. நீங்கள் உங்களின் கருத்துகளை எங்கே பதிவு செய்தாலும், அதன் உண்மைத்தன்மை கேள்விக்குட்படுத்த முடியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதையும் மீறி அதில் ஏதேனும் குறை கூறினால், அந்தக் குறை நியாயமானதாக இருப்பின் ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டாதீர்.
9. தனிமையில் பயணம் செய்யும் போது, உங்களைச் சுற்றி ஆண்கள் மட்டுமே இருந்தால் பயமோ, மிரட்சியோ கொள்ள வேண்டாம். அவர் ஓர் ஆண்' எதிர்பாலினம் மட்டுமே. அவருக்கு எந்த வகையிலும் நான் குறைந்தவள் அல்ல என்ற எண்ணத்தை முதலில் மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள்.
10. கணவன், குழந்தைகள் என எல்லாவற்றையும் தாண்டி உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கென மட்டுமே சில ஆசைகள் இருக்கக்கூடும். அதை நிறைவேற்றிக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. இந்த ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதில்தான் உங்களின் மனவலிமை ஒளிந்து கொண்டிருக்கிறது.
எவரும் பிறக்கும்போதே மனவலிமையோடும் தைரியத்தோடும் பிறப்பதில்லை. பிறந்து, வளர்ந்து, வாழும் வாழ்கைச் சூழல்தான் அவற்றைத் தீர்மானிக்கின்றது. இது, ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் பொருந்தும். எனவே தன்னம்பிக்கையும் மன வலிமையையும் வளர்த்துக்கொள்வது நம்முடைய பயிற்சிகளும் முயற்சிகளும்தான் என உணருங்கள். துணிச்சலோடு செயல்பட்டால் வெற்றி உங்களின் மிக அருகில்தான்.