விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் தங்கவேலு நிமலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
சுமார் 2 கிலோ எடையுள்ள வெடிமருந்துகளை (RDX) வைத்திருந்த குற்றத்துக்கு அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும் அவர் மீது மேலும் பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
2007 மே 28ஆம் திகதி இரத்மலானையில் சிறப்பு அதிரடிப் படையினர் பயணித்த ட்ரக் மீது கிளைமோர் தாக்குதல்.
2009 பெப்ரவரி 7ஆம் திகதியன்று குருநாகல் மாலிகாபிட்டி மைதானத்தில் தேர்தல் பேரணியின் போது மேடைக்கு அருகில் வெடிகுண்டு வெடித்து அப்போதைய ஜனாதிபதியை படுகொலை செய்ய முயற்சித்தது.
2009 மார்ச் 13ஆம் திகதி அக்குரஸ்ஸ, கொடபிட்டியவில் தேவாலய விழா ஒன்றில் தற்கொலை குண்டுதாரி மூலம் அமைச்சர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் உள்பட 46 பேரை படுகொலை செய்யவும், அன்றைய ஜனாதிபதியை வெடிகுண்டு வீசி படுகொலை செய்ய முயற்சித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் விசாரணைகளில் உள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று தருமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அணி இன்று ஜனாதிபதி வீடு நோக்கி பேரணி சென்றது.
ஐக்கிய மகளிர் சக்தி தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர, உப தலைவர் உமாச்சந்திரா பிரகாஷ், செயலாளர் நிருபா, நிரோஷா அத்துக்கோரல மற்றும் உறுப்பினர்கள் பலர் இன்றைய தினம் (05.03.2022) கடிதம் ஒன்றை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இல்லத்திற்கு சென்று கையளித்தனர்.
குறிப்பாக மின்சார தடை, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காக பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்கள் தொடர்பில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகள் இலங்கைக்கு மீண்டும் கடன்களையோ உதவிகளையோ வழங்குவதில்லை என தீர்மானித்துள்ளதாக வார இறுதி சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் உயர்மட்ட அரசியல்வாதிகள் குழுவுடன் தற்போது இலங்கை வந்துள்ள இராஜதந்திரிகள் குழு இதனைத் தெரிவித்துள்ளது.
கடன்கள் அல்லது உதவிகளை வழங்குவதில்லை என்ற தீர்மானம் இரண்டு முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக சீன இராஜதந்திரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்டத்திற்கான நிர்மாண ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினை பிரதான பிரச்சினையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரக் கப்பலைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையும் இதற்குக் காரணம்.
இலங்கை தற்போது 16 பில்லியன் டொலர்களை சீனாவிற்கு செலுத்த வேண்டியுள்ளது. சீனா இலங்கைக்கு வழங்கிய பணத்தில் அபிவிருத்தி திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை எனவும் பெற்ற கடனையே திருப்பி செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இலங்கை இந்தியாவிடமிருந்து வட்டிக்கு கடன் வாங்க நேரிடும் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தான் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக நொடிக்கு நொடி புரளி பரவி வருவதாகவும், யாரும் எங்கேயும் தப்பி ஓடவில்லை என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.
விமல் மற்றும் கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ததை அடுத்து , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களையும் கொழும்புக்கு வரவழைத்த மைத்திரி
இது கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திச் செயற்பாட்டின் ஒரு பகுதி எனவும், இது முன் கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தற்போதைய அரசியல் சிக்கல்களை அடிப்படையாக கொண்டு கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருவதாகவும் திரு.பியதாச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் இவைகள் கட்சியின் எதிர்கால சீர்திருத்தங்களில் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தும் என்பன குறித்தும் அமைப்பாளர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .
உக்ரைன் மீது 10வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி தருகின்றன. தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக்கோரி உக்ரைன் விடுத்த கோரிக்கையை நேட்டோ நிராகரித்துள்ளது.
இன்று கொழும்பின் பல பகுதிகளில் 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை 8 மணி முதல் ஞாயிறு காலை 10 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.
கொழும்பு 07, 08, 10, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
மேலும், கொழும்பு 02, 03 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) 4 மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு நேற்று தெரிவித்திருந்தது.
அதன்படி, காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் 3 மணி நேர மின் வெட்டும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேர மின் வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
மேலும் E & F பகுதிகளுக்கு காலை 8.30 முதல் மாலை 4.30 வரையான காலப்பகுதியில் 4 மணி நேரம் மின்வெட்டும் மற்றும் மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் 3 மணி நேர மின்வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.
ஞாயிற்றுக் கிழமையன்று (6ம் திகதி) காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் A,B,C பகுதிகளுக்கு மட்டும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இவ்வாறு மின் வெட்டு அமுல்ப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.