அனைத்து பயணிகள் போக்குவரத்து பேருந்துகளும் ஒவ்வொரு 5,000 கிலோமீட்டர் பயணித்த பின் கட்டாயமாக வாகன தொழில்நுட்ப நிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.
வீதி விபத்துகளை குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாகவும், வாகன தொழில்நுட்ப நிலையை பரிசோதிக்கும் தகுதியான அதிகாரிகளை விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அண்மைக்காலத்தில் நாட்டில் இடம்பெற்ற வீதி விபத்துகளுக்கான முக்கிய காரணங்களாக ஓட்டுநர்களின் அலட்சியமும், வாகனங்களில் காணப்படும் தொழில்நுட்பக் கோளாறுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, பரிசோதனை அதிகாரிகள் நியமிக்கப்பட்ட பின்னர், இந்தச் சட்டம் முதற்கட்டமாக மூன்று மாதங்களுக்கு பயணிகள் பேருந்துகளுக்கு அமல்படுத்தப்படும் என்றும், பின்னர் நாட்டிலுள்ள அனைத்து வாகனங்களுக்கும் இந்த நடைமுறை விரிவுபடுத்தப்படும் என்றும் வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் வலியுறுத்தினார்.



