நீதித்துறையில் நிலவும் வழக்குகளின் அதிக குவிவை குறைத்து, பொதுமக்களுக்கு விரைவான நீதி வழங்கும் நோக்கில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு அரசு கவனம் செலுத்தி வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக் கிடப்பதால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வு காண்பதாக அரசு தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்ததாகவும், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற நீதித்துறையை விரிவுபடுத்துவது அவசியம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கான காரணங்களை விளக்கிய அவர்,
“1978 ஆம் ஆண்டு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நிர்ணயிக்கப்பட்டபோது, இலங்கையில் பிறக்கும் ஒருவரின் சராசரி ஆயுட்காலம் 66–67 ஆண்டுகளாக இருந்தது. ஆனால் தற்போது சுகாதார வசதிகள் மேம்பட்டுள்ளதால் அது 76–78 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. அதேபோல், கடந்த காலங்களில் பல தொழில்முறை நிபுணர்கள் வெளிநாடுகளுக்கு சென்றதால் நீதித்துறையிலும் சில வெற்றிடங்கள் உருவாகியுள்ளன. இந்த விடயங்களை கருத்தில் கொண்டு, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது குறித்து அரசு நியாயமான முறையில் கவனம் செலுத்தியுள்ளது,” என்றார்.
மேலும், இதற்கு முன்பு உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தாலும், அதற்கேற்ப ஓய்வுபெறும் வயது உயர்த்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கையின் மூலம் நீதித்துறையின் செயல்திறனை மேம்படுத்துவதுடன், நீதித்துறையின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்துவதே அரசின் நோக்கம் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



