– இலங்கைக்கு எச்சரிக்கை
75 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்படக்கூடிய மிக வலுவான எல் நினோ நிலைமையை இந்த முறை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் எல் நினோ நிலைமை மிகவும் வலுவான நிலையை அடைவதற்கான சாத்தியம் 90 சதவீதமாக அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய வானிலை முன்னறிவிப்புகளின்படி, தற்போதைய எல் நினோ நிலைமை படிப்படியாக வலுவடைந்து வருவதாகவும், அது இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த எல் நினோ நிலைமை படிப்படியாக வலுவடைந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் மிகவும் வலுவான எல் நினோ நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியம் 90 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதாக உலகளாவிய முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
1950ஆம் ஆண்டு முதல் கடந்த 75 ஆண்டுகளில் ஏற்பட்ட எல் நினோ நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஏற்படவுள்ள எல் நினோ நிலைமை அவற்றை விட மிகவும் வலுவானதாக இருக்கும் சாத்தியம் தற்போது சுமார் 70 சதவீதமாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது.”
என அவர் குறிப்பிட்டுள்ளார்.




