உலக நாடுகளை பாதித்துள்ள எல் நினோ காலநிலை நிலைமை மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கணேஷ் விநாயகம்சுந்தரம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20% முதல் 25% வரை அதிகரிக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களில் மட்டும் இறக்குமதி செய்யப்படும் சீனியின் ஒரு கிலோகிராம் விலை சுமார் 40 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
5 மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
இதனிடையே, நாட்டில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக 5 மாவட்டங்களில் உள்ள 19 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவலின்படி, அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 23,377 குடும்பங்களைச் சேர்ந்த 73,214 பேர் குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 22,987 குடும்பங்களைச் சேர்ந்த 71,893 பேருக்கு தற்போது நீர்ப்பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
45°C வரை உணரப்படும் வெப்பநிலை
இதற்கிடையில், கிழக்கு மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் மனிதர்களுக்கு உணரப்படும் வெப்பநிலை 39°C முதல் 45°C வரை அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக அனுராதபுரம் ஹுருளுவெவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது.
மேலும், பலுகஸ்வெவ தெயில் ஹவடியாவ குளம் முற்றாக வறண்டுள்ளதால், அப்பகுதி விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அதேபோன்று, மொனராகலை – வெல்லவாய பகுதியில் சிறிய நீர்நிலைகள் மற்றும் நீரோடைகள் வற்றிப்போனதால் பெருமளவான மீன்கள் உயிரிழந்துள்ளன.
மேலும், அனுராதபுரம் – திரப்பனே, பண்டித ரம்பேவ கிராமத்தைச் சேர்ந்த பாரம்பரிய மண்பாண்டத் தொழிலாளர்களும் நீர் பற்றாக்குறை மற்றும் நிலவும் வறட்சி காரணமாக தங்களது வாழ்வாதாரத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.




