தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வெளியிட்ட எந்தவொரு அறிவிப்பையும் வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றத் தவறியுள்ளது என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பெற்றதாகக் கூறப்படும் இலஞ்ச காசோலைகளின் இலக்கங்கள் மற்றும் 450 கோப்புகள் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் தற்போது மறக்கப்பட்டுவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“மகிந்த ராஜபக்ஷ பெற்றதாகக் கூறப்பட்ட காசோலைகளின் இலக்கங்கள் தெரியும் என்றும், தொகைகள் தெரியும் என்றும், ஹோட்டல்கள் தொடர்பான தகவல்கள் தெரியும் என்றும் கூறினார்கள். இப்போது இரண்டு வருடங்கள் ஆகப்போகின்றன. அவற்றுக்கு என்ன நடந்தது? எதுவும் நடக்கவில்லை,” என அவர் தெரிவித்தார்.
பொருளாதார நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர், ஒரே பேனா கையெழுத்தில் அரிசி விலையை கட்டுப்படுத்துவோம் எனக் கூறிய போதிலும், தற்போது அரிசியின் விலை சுமார் 10 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், நெல் உற்பத்தி தொடர்பில் பெருமையாகப் பேசிய அரசாங்கம், தற்போது இலட்சக்கணக்கான தொன் அரிசியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
ரஜரட்ட மற்றும் பொலன்னறுவை பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு அவர்களின் நெல் அறுவடைக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை என்றும், ஒரு கிலோ நெல்லை சுமார் 80 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விவசாயிகளின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள், தற்போது விவசாயிகளை “கசிப்பு விற்பவர்கள்” எனக் கூறி அவமதிப்பதாகவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் குறித்தும் தனது அதிருப்தியை வெளியிட்ட முன்னாள் அமைச்சர், அவர்கள் மக்களின் அறிவாற்றலை அவமதிக்கும் வகையில் செயற்படுவதாகத் தெரிவித்தார்.
அத்துடன், அரசாங்கம் கூறிய “மலர் செடிகளுக்குப் பதிலாக”, பாராளுமன்றத்திற்கு “மிதியடித் துண்டுகள் போன்றவர்கள்” வந்துள்ளதாகவும் அவர் மேலும் விமர்சித்தார்.




