தற்போதைய அரசாங்கத்திற்கு ஒருநாள் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இவ்வளவு கடுமையான எதிர்ப்பு ஏன் எழுந்துள்ளது என்பது புரியும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) முன்னாள் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், “நீதித்துறையுடன் விளையாடக்கூடாது” என்றும் அவர் வலியுறுத்தினார்.
கொழும்பில் ‘Save Our Sovereignty (SOS)’ என்ற சுயாதீன இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சாலிய பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.
தனது கருத்தை விளக்குவதற்காக அவர் கடந்த காலத்தில் இடம்பெற்ற உண்மைச் சம்பவம் ஒன்றையும் உதாரணமாகக் குறிப்பிட்டார்.
“முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக்காலத்தில், முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. அப்போது அவர் பிரபல சட்டத்தரணி ஒருவரிடம், தான் ஒருகாலத்தில் நியமித்த நீதிபதிகளே தற்போது தனக்கு எதிராக விசாரணை நடத்துவதாகக் கூறியிருந்தார்.
அதற்கு அந்த சட்டத்தரணி அவரிடம், ‘அதுதான் மேடம், நீதித்துறையுடன் விளையாடக்கூடாது’ என்று பதிலளித்திருந்தார்.”
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சட்டத்துறையில் உள்ள பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.
“இந்தத் திருத்தத்தை ஏற்றுக்கொண்டு ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தும் சில சட்டத்தரணிகள்கூட, தனிப்பட்ட முறையில் தாங்கள் இதற்கு எதிரானவர்கள் என்று எங்களிடம் கூறியுள்ளனர். ஆனால், பகிரங்கமாக அவர்கள் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கும் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்.”
என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.




