துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இன்று (25) அதிகாலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றினால் அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் துபாய் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ மீது மனிதக் கொலைகள், குற்றச் செயல்கள் மற்றும் கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
களுத்துறை தெற்கு பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய இந்த சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவினரால் இந்த சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், கொலைக் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜராகாதமை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அவருக்கு எதிராக திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 2021.09.20 அன்று நெலுந்துடுவ பகுதியில் வசிக்கும் ஒருவரின் வீட்டிற்கு முன்பாகச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தி அவரை கடுமையாகக் காயப்படுத்த முயன்ற சம்பவம் தொடர்பாகவும் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தினால் ‘பஸ் லலித்’ மீது திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2022.10.16 அன்று மூன்று நபர்களை வெட்டிக் கடுமையான காயங்களை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாகவும் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தினால் ‘பஸ் லலித்’க்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




