சம்பள உயர்வு வழங்கப்படாததால் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை முறையாகப் பராமரித்திருந்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை 50 முதல் 70 ரூபாய் வரை குறைக்க முடியும் என்ற போதிலும், அரசாங்கம் அதனைச் செய்யத் தவறியுள்ளதாக குறிப்பிட்டார்.
அதேவேளை, பேருந்து கட்டணங்களும் கோதுமை மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இரட்டிப்பு சுமையை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், அரசியலமைப்பு மறுசீரமைப்பு என்ற பெயரில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதுடன், அவர்களுக்கான சம்பளத்தையும் உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக ஆனந்த பாலித குற்றம் சாட்டியுள்ளார்.




