ஜப்பான் மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்புகளுக்காக முதல் முறையாக வெளிநாடு செல்லும் இலங்கைப் பணியாளர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வது கட்டாயம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக செல்லும் பணியாளர்களுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான பயிற்சி பாடநெறி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பயிற்சியைப் பெறாத பணியாளர்களுக்கு பணியகத்தில் பதிவு செய்ய அனுமதி வழங்கப்படாது என்பதுடன், குறித்த பயிற்சி பாடநெறியை முழுமையாக நிறைவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து செல்லும் நபர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி வழங்கப்படும். அதேவேளை, ருமேனியாவில் வேலைவாய்ப்பிற்காக செல்லும் நபர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி வழங்கப்படும்.
இந்தக் கட்டாய பயிற்சி பாடநெறிக்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அனைத்து கிளை அலுவலகங்களிலும் பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




