வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நாமல் ராஜபக்ஷ கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற கொள்கைப் பிரகடனத்தில், “திறன்மிக்க தொழிலாளர் வளம் – கண்ணியமான தொழில் வாழ்க்கை” என்ற அத்தியாயத்தின் கீழ் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கொள்கை முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டிருந்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, “வேலையற்ற பட்டதாரிகள்” என்ற பிரிவின் கீழ்,
- ஆசிரியர் சேவைக்கு – 20,000 பேர்
- தகவல் தொழில்நுட்பத் துறைக்கு – STEM பட்டதாரிகள் 3,000 பேர் மற்றும் Non-STEM பட்டதாரிகள் 9,000 பேர்
- வருமான வரி, சுங்கம், வெளிநாட்டு சேவை மற்றும் சுற்றுலாத் துறைகளுக்கு – 3,000 பேர்
என வேலைவாய்ப்புகளை வழங்குவதாக கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனவே, அந்தக் கொள்கைப் பிரகடனத்தில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழியை நடைமுறைப்படுத்தும் வகையில், தற்போது வேலையின்றி இருக்கும் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளுமாறு அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.




