ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராமம் கிராமமாக முன்னெடுக்கப்படும் தொகுதிக் கூட்டங்கள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில், கட்சியின் தேசிய அழைப்பாளர் டி.வி. சானக மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பு நிலவுவதாகவும், அடக்குமுறையின் ஊடாக நாட்டை ஆட்சி செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதனால், கிராமம் கிராமமாகச் சென்று தற்போதைய அரசாங்கத்தின் தோல்விகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொகுதி அமைப்பாளர்கள் கிராமம் கிராமமாகக் கூட்டங்களை விரைவாக நடத்த வேண்டுமெனத் தம்மிடம் கடுமையாகக் கோரிக்கை விடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பணவீக்கம் 8 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்றும் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
நிலக்கரிக் கொள்கலன்கள் தொடர்பான சர்ச்சை மற்றும் பௌத்த பிக்குகள், பௌத்தர்கள் மீதான அடக்குமுறைகள் எனக் கூறப்படும் விடயங்கள் தொடர்பிலும், கிராமம் கிராமமாகச் சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




