– அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார
கடந்த சுமார் 50 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த முந்தைய அரசாங்கங்கள் உரிய முறையில் முன்னெடுக்காமல் கைவிட்ட அபிவிருத்திப் பணிகளை, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமற்றது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
76 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த தரப்பினரால் உண்மையில் என்ன அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட வேண்டும் என்றும், தற்போதுள்ள பிரச்சினைகளுக்குத் துரிதமாகத் தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், கொழும்பில் காணப்படும் வடிகால் மற்றும் கழிவுநீர் அகற்றும் கட்டமைப்புகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டவை எனக் குறிப்பிட்டார்.
தற்போது காலநிலை மாற்றம் காரணமாகப் பெய்து வரும் அதிக மழைவீழ்ச்சி இந்நிலைக்கு நேரடிக் காரணமாக அமைந்துள்ளதாகவும், கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவது இதுவே முதல் தடவையல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், அது தொடர்பாகக் கொழும்பு மாநகர முதல்வரிடமே கேட்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், மக்களின் தேவைகளுக்கு ஏற்ப உரிய முறையில் கடமைகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில், மாநகர முதல்வர்கள் உட்பட எந்தப் பதவியில் இருப்பவர்களையும் அரசாங்கம் தொடர்ந்து அந்தப் பதவிகளில் வைத்திருக்காது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.




