அனுராதபுர புனிதப் பிரதேசத்திற்கான அபிவிருத்தித் திட்டம், முன்னாள் அட்டமஸ்தானாதிபதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரரின் கோரிக்கைக்கு அமையவே நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
“அனுராதபுர புனிதப் பிரதேசத்திற்கான அடிப்படைத் திட்டமே தற்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது. முன்னாள் அட்டமஸ்தானாதிபதி தேரர் என்னிடம் முன்வைத்த கோரிக்கை இதுவாகும். அவர் கேட்டுக்கொண்ட விடயத்தையே நாம் தற்போது முன்னெடுத்து வருகின்றோம்.
இந்தத் திட்டத்தைக் கண்காணித்து வழிநடத்துவதற்காக, பதில் அட்டமஸ்தானாதிபதியின் இணைத் தலைமையில் ஆலோசனைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. தூபாராமை உள்ளிட்ட பல விகாரைகளைச் சேர்ந்த நான்கு பீடாதிபதி தேரர்களும் இக்குழுவில் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.
அட்டமஸ்தானாதிபதி தேரருக்குத் தெரியாமலும், அந்தப் பிரதேசத்தின் ஏனைய பீடாதிபதி தேரர்களுக்குத் தெரியாமலும் யாரோ வெளியிலிருந்து வந்து அங்கு அமர்ந்துகொண்டிருக்கின்றனர். என்ன இந்தக் கூத்து? இதுதான் எமது நாட்டின் வரலாற்று மரபுரிமை” எனத் தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நேற்று (12) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய பின்னணி:
15 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரர், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர் அட்டமஸ்தானாதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
மேலும், இந்த வழக்கை மூடிமறைக்க அரசாங்கம் அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவியும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியுமான இனோகா ரணசிங்க தனது பதவியை இராஜினாமா செய்ய நேரிட்டதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.




