2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மதுவரி (Excise Duty) திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரி அதிகரிக்கப்பட்டால், மதுபானங்களின் விலைகளை உயர்த்துவதற்கு மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் விலை அதிகரிப்பினால் போக்குவரத்துச் செலவுகள் உயர்ந்துள்ளதுடன், மதுபான உற்பத்தியுடன் தொடர்புடைய ஏனைய செலவுகளும் அதிகரித்துள்ளதாக நிறுவனங்களின் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய செலவின அதிகரிப்பை உடனடியாக நுகர்வோர் மீது சுமத்தாமல், வரவு செலவுத் திட்டத்தில் மதுவரி அதிகரிக்கப்பட்டால் அதனையும் கருத்திற்கொண்டு மதுபானங்களின் விலைகளை ஓரளவு அதிகரிக்க உற்பத்தி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே மதுபானங்களின் விலைகள் நுகர்வோரால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதனைக் கருத்திற்கொண்டு தற்போது விலைகளை அதிகரிக்காமல் இருந்தாலும், மேலும் மதுவரி அதிகரிக்கப்பட்டால் தொழிற்துறையைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக விலைகளை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் அவை தெரிவிக்கின்றன.
இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சட்டபூர்வமான மதுபானங்களுக்குப் பதிலாக சட்டவிரோத மதுபானங்கள், ஐஸ் மற்றும் போதைப்பொருட்களை நோக்கிச் செல்வதால், சட்டபூர்வமான மதுபான விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.
அரசாங்கத்திற்கு கிடைக்கும் மதுவரி வருமானத்தில் சுமார் 80 சதவீதத்தை வழங்கும் நான்கு பிரதான நிறுவனங்களில், ஒரு நிறுவனம் தனது மதுபானங்களின் விலையைச் சிறிய அளவில் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும், மற்றுமொரு பிரதான நிறுவனம் வெற்று மதுபானப் போத்தல்களை மீள ஒப்படைக்கும்போது வழங்கப்படும் பணத்தை அதிகரித்துள்ளதாகவும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.




