ஒரு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்படும் நிதி, அந்த ஆண்டின் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் செலவிடப்பட வேண்டும் என்றும், செலவிடப்படாமல் எஞ்சும் நிதி அனைத்தும் மீண்டும் அரசின் ஒருங்கிணைந்த நிதியத்திற்கு மாற்றப்படும் என்றும் முன்னாள் நிதி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
டித்வா அனர்த்தத்திற்காக 2025ஆம் ஆண்டு குறைநிரப்பு மதிப்பீட்டின் மூலம் ஒதுக்கப்பட்ட ரூ.500 பில்லியன் நிதியில் சுமார் ரூ.40 பில்லியன் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய ரூ.460 பில்லியன் மீண்டும் அரசின் ஒருங்கிணைந்த நிதியத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஒலிம்பிக், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சார்க் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் வீரர்களுக்கு மில்லியன் கணக்கான ரூபாய் பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டாலும், 2027ஆம் ஆண்டில் உலக தடகள சம்பியன்ஷிப் போட்டி மட்டுமே நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, குறித்த போட்டிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.100 மில்லியனுக்கும் அதிகமான நிதி, டிசம்பர் 31ஆம் திகதி மீண்டும் அரசின் ஒருங்கிணைந்த நிதியத்திற்கு திரும்பிச் செல்லவுள்ளதாகவும், அதனை கடந்த காலங்களில் சர்வதேச மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்களுக்கு வழங்குவது பொருத்தமானது என்றும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிடும் கருத்துக்கள் எவ்வித அடிப்படையும் அற்றவை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹிரு தொலைக்காட்சியின் ‘சலகுண’ அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே ரவி கருணாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.




